< Back
மாநில செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
திருச்சி
மாநில செய்திகள்

சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

தினத்தந்தி
|
6 Nov 2022 9:06 PM GMT

சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடக்கிறது.

அன்னாபிஷேகம்

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் சாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்பட்டுள்ளது. அன்னமும் லிங்க வடிவில் உள்ளது. மேலும் ஐப்பசியில் வரும் பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் 16 கலைகளுடன் பூரண சோபையுடன் பிரகாசிக்கிறது.

இதையொட்டி ஆண்டுக்கு ஒருமுறை வரும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று சிவன் கோவில்களில் சாயரட்சையின்போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் அரிசியை சமைத்து சாதமாக்கி, அந்த அன்னத்ைத கொண்டு லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் நடைபெறும்.

இன்று நடக்கிறது

இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம். சிவன் காலடியில் படைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டால் நோய் நொடிகள் வராது. குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் ஐதீகம். மேலும் பஞ்சபூதங்களை வழிபட்ட புண்ணியமும் கிட்டும் என்பதாகும். அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமியான இன்று (திங்கட்கிழமை) மாலை திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதில் திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலின் தெற்கு மூலையில் உள்ள குபேரலிங்கத்திற்கு மாலை 6 மணிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சாமி கோவிலில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னாபிஷேக அலங்காரத்தை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

சிவன் கோவில்களில்...

இதேபோல் திருச்சி பெரியகடை வீதியில் உள்ள கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில், நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதர் கோவில் மற்றும் தான்தோன்றீஸ்வரர் கோவில், பாலக்கரையில் உள்ள வெளிகண்டநாதர் கோவில், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் இன்று மாலை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்