குற்றால அருவியின் மேல் பகுதியில் சென்னை அண்ணா பல்கலை. பேராசிரியர் குழு ஆய்வு
|வனத்துறை குழுவினர் உதவியுடன் அருவியின் மேல் பகுதியில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
தென்காசி,
தென்காசி குற்றால அருவிகளில் தீடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபோன்று திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நவீன சென்சார் கருவிகளை மலைப்பகுதிகளில் பொறுத்தி, வெள்ளம் வருவதை முன்கூட்டியே கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் நவீன சென்சார் கருவிகளை அனைத்து அருவிகளின் மேல் பகுதியில் பொறுத்த தென்காசி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழுவினர் இன்று குற்றாலம் சென்றுள்ளனர். அவர்கள் மலைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு எந்தெந்த இடங்களில் இந்த கருவிகளை பொறுத்தலாம் என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். வனத்துறை குழுவினர் உதவியுடன் அருவியின் மேல் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.