அண்ணா தொழிற்சங்கத்தினர் நாளை பணிக்கு செல்வார்கள் - தொழிற்சங்க தலைவர் கமலக்கண்ணன் அறிவிப்பு
|ஜனவரி 19-ந் தேதி அரசு சார்பில் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், மீண்டும் வேலைநிறுத்தத்தை தொடருவோம் என்று கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.
சென்னை,
பொங்கலுக்கு பஸ்களை ஓட்ட வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது என்று அண்ணா தொழிற்சங்க தலைவர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலை நிறுத்தத்தை 19-ந்தேதி வரை ஒத்தி வைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சட்டப்படி தான் வேலை நிறுத்தம் செய்கின்றனர். 4 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பொங்கலுக்கு பஸ்களை ஓட்ட வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது.
அதனால் நாளை முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புகின்றனர். ஆனால் அரசு தொழிலாளிகளை பற்றி கவலைப்படாமல் விடாப்பிடியாக இருக்கிறது. இருந்தாலும், 19-ந்தேதி மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. ஐகோர்ட்டு தீர்ப்பை ஏற்று அதுவரை எங்களுடைய வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் அன்றிலிருந்து வேலைநிறுத்தம் தொடரும். எனவே, 19-ந்தேதி நல்ல முடிவை அரசு எடுக்க வேண்டும்" என்று கமலக்கண்ணன் கூறினார்.