< Back
மாநில செய்திகள்
129 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

129 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
14 Sept 2024 12:41 PM IST

அண்ணா பிறந்தநாளையொட்டி, காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை மற்றும் விரல்ரேகைப் பிரிவு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, காவல் துறையில் தலைமைக்காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் ஊர்க்காவல்படையில் மற்றும் அலுவலர்களுக்கும். ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும் மற்றும் விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கும். அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் "தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்" வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் பணிபரிந்து வரும் எஸ்.மந்திரமூர்த்தி, முன்னணி தீ அணைப்போர் 7807 மற்றும் திரு.ராமச்சந்திரன், தீ அணைப்போர். 8229 ஆகிய இருவரும் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி இரவு தாமிரபரணி ஆற்றின் கரையில் வெள்ளம் புகுந்த கிராமங்களில் இருந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலையில், மீட்பு பணி சவாலாக இருந்த நிலையிலும், படகுகள் மூலம் சுமார் 448 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இருவருக்கும் "தமிழக முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்" வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். மேற்கண்ட பதக்கங்கள் தமிழ்நாடு முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்