வேலூர்
அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயம்
|வேலூரில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்ட இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக கலாசாரம் குறித்து இளைஞர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தய தொடக்க நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான், தாசில்தார் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்தார்.
17 முதல் 25 வயது வரையிலான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என்று 2 பிரிவாக ஓட்டப்பந்தயம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஓட்டப்பந்தயம் கிரீன்சர்க்கிள், நேஷனல் சிக்னல், புதிய மீன்மார்க்கெட், கோட்டை சுற்றுச்சாலை வழியாக சென்று நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழும், 4 முதல் 10-ம் இடம் பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை மட்டும் வழங்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.