< Back
மாநில செய்திகள்
அண்ணா நூற்றாண்டு நூலக புனரமைப்பு பணிகள் இம்மாத இறுதியில் முடியும் - ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை
மாநில செய்திகள்

அண்ணா நூற்றாண்டு நூலக புனரமைப்பு பணிகள் இம்மாத இறுதியில் முடியும் - ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு தகவல்

தினத்தந்தி
|
3 Sept 2022 1:55 PM IST

அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைக்கும் பணிகள் இம்மாத இறுதியில் முடியும் என்று ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.மணிவாசகம், முதன்மைத் தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் (தேர்வு) செல்வகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பிறகு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆசியாவின் 2-வது மிகப்பெரிய நூலகமான, சென்னையில் இருக்கின்ற குறிப்பாக கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் இந்த நூலகத்தை பார்வையிட்டபோது "இதுபோன்று பரந்து விரிந்து மிக அதிகமான புத்தகங்களை கொண்ட நூலகத்தை வேறு எங்கும் கண்டதில்லை" என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

புதியதாக ஆட்சி பொறுப்பேற்ற, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதிலமடைந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சீர்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, 25-10-2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டு ரூ.32.49 கோடி ஒதுக்கீடு செய்தார். அதில் சிவில் பணிக்காக ரூ.18.26 கோடியும், மின் பணிக்காக ரூ.14.23 கோடியும் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 30-9-2022 அன்று முடிவடைய வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

இந்நூலகம் 8 தளங்களை உள்ளடக்கியது, ஒவ்வொரு தளங்களாக பார்த்து, எங்கெல்லாம் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது, எங்கெல்லாம் பணிகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும் என்று விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

தற்போது புதியதாக 30,160 சதுர அடி அளவுக்கு தரைவிரிப்பு அமைக்கப்பட்டு உள்ளது, புதியதாக எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும், மின்சாரம் இல்லாத நேரத்தில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு வந்தது, அது பழுதடைந்த நிலையில் தற்போது புதியதாக அதிக மின்சக்தி கொண்ட ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்நூலகத்தில் ஓலைச்சுவடிக்கென 7-வது தளம் அமைந்துள்ளது, அதில் உள்ள ஓலைச்சுவடிகளை தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாத்திடவும், மக்கள் பார்வைக்கு சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, 90 சதவீதப் பணிகள் முடிவடைந்த நிலையில் சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்