சென்னை
சென்னை விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் முடிந்ததால் அண்ணா, காமராஜர் பெயர் பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும்
|சென்னை விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் முடிந்ததால் அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர் பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தினார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக விமான நிலைய ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினரும், சென்னை விமான நிலைய ஆலோசனை குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார்.
விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம், மாநகராட்சி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், போலீஸ் அதிகாரிகள், குடியுரிமை, சுங்க இலாகா அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிலைய ஆணையக அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சென்னை விமான நிலைய நவீனமயமாக்கல் திட்டம், விமானப்போக்குவரத்து மேம்பாடு பணிகள், தடைகளை நீக்குதல் மற்றும் மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்ட நில பகுதிகள் கையகப்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் உள்ள 2-வது ஓடுதள பாதையை நீளப்படுத்த நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து செய்ய வேண்டும். 2 ஓடுபாதைகளும் ஒரே நேரத்தில் செயல்படுத்தவும், விமானங்கள் தரையிறங்க தடையாக உள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் இருக்கும் உயர்ந்த கட்டிடங்கள், செல்போன் கோபுரங்கள் என 91 கட்டிடங்களின் உயரத்தை குறைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பணியை விரைவுப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு டி.ஆர்.பாலு எம்.பி., குடியிருக்கும் வீடுகளை இடிப்பது சரியாக இருக்காது. மாற்று வழி குறித்து விமான நிலைய ஆணையகம் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
மேலும் விமான நிலைய விரிவாக்க கட்டுமான பணிகள் முடிந்து உள்ளதால் அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர் பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும் எனவும் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை பணியில் அமர்த்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
விமான நிலைய குடியுரிமை பகுதிகளில் கூடுதல் குடியுரிமை அதிகாரிகளை நியமிக்கவும், விமான நிலைய அடுக்குமாடி கார் பார்க்கிங் பகுதியில் வாடகை கார்கள், ப்ரீபெய்ட் டாக்சிகளை நிறுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.