< Back
மாநில செய்திகள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திருப்பணிகள் 80 சதவீதம் நிறைவு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திருப்பணிகள் 80 சதவீதம் நிறைவு

தினத்தந்தி
|
23 Jun 2023 12:15 AM IST

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திருப்பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்தது.

நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தநிலையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள 24 வைணவ திருத்தலங்களில் ரூ.5 கோடியே 68 லட்சத்தில் திருப்பணிகள் நடைபெறும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து இருந்தார்.

அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.33 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் வர்ணம் பூசும் பணி மற்றும் சாளக்காரம் கட்டும் பணியை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும் தட்டோடு பதிக்கும் பணி, விநாயகர் கோவில் மராமத்து பணி மற்றும் ஆஞ்சநேயர் கோவில் படிக்கட்டுகளுக்கு பித்தளை கவசம் சாற்றும் பணிகளை தனிநபர்களின் நிதி பங்கீட்டில் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இது குறித்து கோவில் செயல் அலுவலர் இளையராஜா கூறியதாவது:-

ஆஞ்சநேயர் கோவில் திருப்பணியை பொறுத்த வரையில் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இன்னும் எலட்ரிக்கல் வேலை தான் மிச்சம் உள்ளது. விரைவில் அனைத்து பணிகளையும் முடித்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டதால் தற்போது கோவில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

மேலும் செய்திகள்