ஆனி மாத பவுர்ணமி; திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
|ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 7.46 மணியளவில் தொடங்கியது. கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டது. அதன் மூலம் பக்தர்கள் பலர் திருவண்ணாமலைக்கு வந்தனர். பகலில் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டாலும் மாலையில் இருந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலமானது இன்று (சனிக்கிழமை) காலை 7.21 மணியளவில் நிறைவடைகிறது. அதனால் பக்தர்கள் இன்று காலை வரை தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.