சென்னை
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பயங்கரம் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை சாலையில் நின்றவர்களை வழிவிடுமாறு கூறியதால் ஆத்திரம்
|பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அம்பத்தூர்,
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சாலையில் நின்றவர்களை வழிவிடுமாறு கூறியதால் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் காமேஷ் (வயது 25). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் நள்ளிரவில் சவாரி முடித்துவிட்டு ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அம்பத்தூர் ஒரகடம் அய்யப்பன் தெரு சந்திப்பு அருகே வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த கவுதம் என்பவர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து சாலையோரம் கேக் வெட்டி கொண்டாடி கொண்டிருந்தார். அவர்களிடம் காமேஷ், ஆட்டோவுக்கு வழிவிடுமாறு கூறினார். இதனால் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காமேசுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
காமேசுக்கு ஆதரவாக அவரது உறவினர் சதீஷ் என்பவர் வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கவுதம் மற்றும் அவருடன் இருந்த 10-க்கும் மேற்பட்ட நண்பர்கள் ஒன்று சேர்ந்து காமேஷ் மற்றும் சதீசை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த காமேஷ், சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த சதீஷ் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான காமேஷ் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதம் மற்றும் அவரது நண்பர்கள் 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.