< Back
மாநில செய்திகள்
சொத்து பிரச்சினையில் ஆத்திரம்: இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மாமனார்
மாநில செய்திகள்

சொத்து பிரச்சினையில் ஆத்திரம்: இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மாமனார்

தினத்தந்தி
|
27 May 2024 3:37 AM IST

பெட்ரோல் ஊற்றி இளம்பெண்ணை எரித்துக்கொன்ற அவரது மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள முத்து விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசு (வயது 70). இவரது மகன் ஆரோக்கிய பிரபாகரன் (36). இவரும் தட்டான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த உமாவும் (32) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மரிய ஜெலினா (11), ஜெமி தெரசா (7) என 2 மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் ஆரோக்கிய பிரபாகரனும், இளைய மகள் ஜெமி தெரசாவும் இறந்துவிட்டனர். இதனால் உமாவும், தனது மூத்த மகள் மரிய ஜெலினாவும் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் மாமனார் ஜேசு, சொத்து பிரச்சினையில் உமாவை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் கிராம பெரியோர்கள் உமா மற்றும் ஜேசுவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் காரணமாக மீண்டும் உமா மட்டும் தனது கணவர் வீட்டில் வசித்தார். அவரது மகள் மரிய ஜெலினா உமாவின் தந்தை வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன் தந்தை ஜெயராஜிடம் உமா செல்போனில் பேசியுள்ளார். அப்போது மாமனார் ஜேசு, தன்னை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சிக்கிறார் என கூறியுள்ளார். இதையடுத்து ஜெயராஜ், முத்து விஜயபுரம் வீட்டில் வந்து பார்த்தபோது உமா தீயில் கருகி பலத்த காயங்களுடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீசார் முதல் கட்டமாக தற்கொலை என வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இது தொடர்பாக ஜேசுவிடம் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்சினையில் உமா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றதாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கீழத்தூவல் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், ஜேசு மீது கொலை வழக்கு பதிந்து அவரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

தீக்காயங்களுடன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட உமா, அங்கிருந்தவர்களிடம் தன்னை மாமனார் ஜேசுதான் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்துள்ளேன் என தெரிவித்தார்.

ஆனால் போலீசார் முதல் கட்டமாக தற்கொலை செய்து கொள்வதற்காகவே உமா, பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாக வழக்குபதிவு செய்தனர். போலீசார் இந்த விவகாரத்தில் அலட்சியமாக விசாரித்து உள்ளனர். பின்னர் இந்த விவகாரம் தீவிரமானதால்தான் உமாவின் மாமனாரை பிடித்து விசாரித்து, கொலை வழக்காக மாற்றியுள்ளனர் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்