ஈரோடு
முந்திச்செல்ல வழிவிடாததால் ஆத்திரம்: பஸ் கண்ணாடியை உடைத்தவருக்கு போலீஸ் வலைவீச்சு
|அம்மாபேட்டையில் முந்திச்செல்ல வழிவிடாததால் ஆத்திரம் அடைந்து பஸ் கண்ணாடியை உடைத்தவரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
அம்மாபேட்டை:
திருப்பூரில் இருந்து மேட்டூர் வழியாக தர்மபுரிக்கு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் காலை சென்றுகொண்டு இருந்தது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அஞ்சனூரை சேர்ந்த சக்திவேல் (வயது 47) என்பவர் பஸ்சை ஒட்டினார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்துள்ள நெரிஞ்சிப்பேட்டை அருகே பஸ் சென்றுகொண்டு இருந்தது. அப்போது பஸ்சுக்கு பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்தவர் முந்திச்செல்ல வழிவிடச்சொல்லி ஹாரன் அடித்துள்ளார். ஆனால் சக்திவேல் வழி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
மோட்டார்சைக்களில் வந்தவர் இதனால் ஆத்திரமடைந்து வேகமாக பஸ்சை முந்திச்சென்று வழிமறித்தார். பின்னர் டிரைவர் சக்திவேலிடம் வழி கொடுக்காமல் ஓட்டுகிறாயா? பஸ்சின் கண்ணாடியை உடைக்காமல் விடமாட்டேன் என்று தகாத வார்த்தையால் கூறிவிட்டு முந்தி சென்றார். அதன்பின்னர் பஸ் நெரிஞ்சிப்பேட்டை அடுத்து மூலக்கடை என்ற இடத்தில் சென்றபோது அதே நபர் மீண்டும் ரோட்டின் குறுக்கே மோட்டார்சைக்கிளோடு பஸ்சை மறித்தார். பின்னர் அங்கு கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது வீசினார். இதில் கண்ணாடி உடைந்தது. நல்லவேளையாக டிரைவருக்கும், பயணிகளுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து பஸ்சின் டிரைவர் சக்திவேலும், கண்டக்டரும் இதுகுறித்து போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பிவைக்கப்பட்டார்கள். மேலும் இதுகுறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்தவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.