கள்ளக்குறிச்சி
தியாகதுருகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்
|தியாகதுருகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கண்டாச்சிமங்கலம்,
தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 434 வட்டாரங்களில் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் சுமார் 364 வட்டார திட்ட உதவியாளர்கள் ஒப்பந்த பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த ஒப்பந்த பணியாளர்களை போஷான் அபியான் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலக உதவியாளர்கள், மேற்பார்வையாளர் நிலை-2 ஆகிய பணியிடங்களில் நிரப்புவதற்கு அரசு துறை ரீதியாக கருத்து கேட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாறு ஒப்பந்த பணியாளர்களை மேற்பார்வையாளர் நிலை-2 பணியிடத்தில் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து தியாகதுருகம் வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் புனிதவதி தலைமை தாங்கினார். இதில் சுமார் 60-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு சுமார் 3 மணி நேரம் அலுவலகத்தின் முன்பு காத்திருந்தனர். தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநரிடம் சுமூக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறி அனைவரும் கலைந்து சென்றனர்.