கன்னியாகுமரி
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்
|காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் மாநிலம் தழுவிய மாலை நேர தர்ணா போராட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது. இந்த போராட்டம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும். பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையம் ஆக்குவதையும் 2 மையங்களை ஒரு மையமாக இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர் ஆக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் காலகட்டத்தில் வழங்கும் ஊதியத்தில் பாதியை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியருக்கும், உதவியாளருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது.
ஏராளமானோர் பங்கேற்பு
போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் அமுதா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சரஸ்வதி தொடக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரன், மாநில குழு உறுப்பினர்கள் இந்திரா, சந்திரகலா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் குமாரி சுஜரிதா, சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் சித்ரா, மாவட்ட துணை தலைவர் சந்திர போஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன் நிறைவுரையாற்றினார். முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் சரோஜினி நன்றி கூறினார். இதில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.