புதுக்கோட்டை
அங்கன்வாடி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
|விராலிமலை அருகே அங்கன்வாடி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அங்கன்வாடி ஊழியர்
விராலிமலை தாலுகா வடுகப்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஆனந்தி (வயது 49). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனந்தி விராலிமலை தெற்கு தெருவில் உள்ள அங்கன்வாடியில் சமையலராக வேலைபார்த்து வந்தார். இவரது குடும்பத்தில் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த ஆனந்தி நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்க சென்றுள்ளார்.
தற்கொலை
இதனையடுத்து நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் ஆனந்தி எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது ஆனந்தி அவரது சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் ஆனந்தியை சோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து விராலிமலை போலீசார் ஆனந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.