திருச்சி
சேதமடைந்த நிலையில் அங்கன்வாடி மேற்கூரை
|சேதமடைந்த நிலையில் அங்கன்வாடி மேற்கூரை உள்ளது.
துறையூர்:
துறையூர் அருகே குன்னுப்பட்டி ஊராட்சி மேல குன்னுப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த அங்கன்வாடி மையத்திற்கு 30 குழந்தைகள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. இந்தநிலையில் அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகளை குரங்குகள் உடைத்து விட்டன. இதனால் மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி மேற்கூரையின் ஓட்டை வழியாக மழைநீர் ஒழுகுகிறது. மழைக்காலங்களில் கட்டிடத்தின் உள்ளே வெள்ளம் போல் மழைநீர் தேங்கி நிற்கும். அந்த சமயங்களில் அங்கன்வாடி மையம் செயல்படாது. எந்த நேரத்திலும் ஓடுகள் இடிந்து குழந்தைகளின் மீது விழும் அபாய நிலை உள்ளது. எனவே அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.