அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை வழங்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
|அங்கன்வாடி மையங்களில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வாரம் 3 முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவில் முட்டை, பயிறு வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு காய்கறி உணவு மற்றும் சத்து மாவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவையும் அளிக்கும் பொருட்டு சிற்றுண்டி திட்டம் அண்மையில் கொண்டு வரப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த திட்டமாக இருந்தாலும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
இதன் கீழ் மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படும். அங்கன்வாடி மையங்களில் ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்ததை, நவம்பர் 2022 முதல் 3 முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.