புதுக்கோட்டை
ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்கள்
|கறம்பக்குடி ஒன்றியத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
130 அங்கன்வாடி மையங்கள்
கறம்பக்குடி ஒன்றியத்தில் 130 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 3 வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகள் அரிச்சுவடி கற்று வருகின்றனர். இந்த மையங்களில் 200-க்கும் மேற்பட்டோர் அங்கன்வாடி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவது, பேறு கால பதிவேடுகளை பராமரிப்பது, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மாவு உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்குவது இந்த மையங்களின் மூலம் நடைபெற்று வருகிறது.
மேற்கூரைகள் உடைந்துள்ளது
இந்த தாலுகாவில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களில் 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பெரும்பாலும் இந்த கட்டிடங்கள் ஆஸ்பெட்டாஸ் கூரை உள்ள கட்டிடங்களாக உள்ளன. பல மையங்களில் இந்த மேற்கூரைகள் உடைந்து சிதிலமடைந்து உள்ளது.
கறம்பக்குடி வடக்கு தெரு டி.இ.எல், சி.சாலை, தீத்தான் விடுதி, வெட்டன் விடுதி, பல்லவராயன் பத்தை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்பவே பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். சில மையங்கள் பாதுகாப்பற்ற நிலையில் மரத்தடி உள்ளிட்ட வெட்ட வெளியில் நடைபெற்று வருகிறது.
கோரிக்கை
கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளதால் கற்பித்தல் பணிக்காக அரசால் வழங்கப்பட்டுள்ள பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை பயன்படுத்த முடியாமல் வீணாகும் நிலை உள்ளது. சில மையங்களில் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உணவு தயாரிக்கப்படுகிறது. இந்த ஆபத்தான அங்கன்வாடி கட்டிடங்களில் குழந்தைகளுடன் தாய்மார்களும் கர்ப்பிணிகளும் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி காத்திருந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
கோடை மற்றும் மழை காலங்களில் கர்ப்பிணிகள் பெரும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். எனவே கறம்பக்குடி பகுதியில் ஆபத்தான நிலையில் சிதிலமடைந்து கிடக்கும் அங்கன்வாடி மையங்களை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதிய கட்டிடம் கட்ட வேண்டும்
இதுகுறித்து கறம்பக்குடி வடக்கு தெரு பகுதி பொதுமக்கள் கூறுகையில், கறம்பக்குடி தாலுகாவில் உள்ள பல அங்கன்வாடி கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன. பாதுகாப்பற்ற கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் கறம்பக்குடி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளன.
கர்ப்பத்தை பதிவு செய்வது தொடங்கி குழந்தைக்கு 5 வயது ஆகும் வரை பல்வேறு கட்டங்களில் பெண்கள் அங்கன்வாடி மையத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் உயிர் பயத்துடன் பரிதவிக்கும் நிலை உள்ளது. எனவே பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்துக்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று கூறினர்.