< Back
மாநில செய்திகள்
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கடலூர்
மாநில செய்திகள்

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
4 Sept 2023 1:51 AM IST

கடலூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அங்காள பரமேஸ்வரி அம்மன்

கடலூர் வண்டிப்பாளையம் மெயின்ரோட்டில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த உபயதாரர்கள், விழா குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி திருப்பணி வேலைகள் நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.

இதையொட்டி அனுக்ஞை, மகா சங்கல்பம், கணபதி, லட்சுமி, நவக்கிரக, அஸ்திர, மூர்த்தி ஹோமங்கள் நடந்தது. கோ பூஜை, தன பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கிரகணம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தீர்த்த, அக்னி சங்கிரஹணம், யாகசாலை நிர்மானம், சோம கும்ப பூஜை, அங்குரார்ப்பணம், முதல் கால யாக சாலை பூஜை, மண்டப பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

நேற்று முன்தினம் விஷேச சந்தி, யாக சாலை பூஜை, வேதிகார்ச்சனை, மூல மந்திரம், மாலா மந்திரம், வேதமந்திர ஹோமம், 2-ம் கால யாக சாலை பூஜை, சூர்ய பூஜை, 3-ம் கால யாக சாலை பூஜை நடந்தது. இதையடுத்து கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, யாகசாலை பூஜை ஹோமம், தத்துவார்ச்சனை, நாடி சந்தானம், யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடந்தது. இதில் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசத்தை குருக்கள் ஊர்வலமாக கொண்டு செல்ல, அதையடுத்து முக்கிய பிரமுகர்களும் ஊர்வலமாக சென்றனர்.

அதன்பிறகு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோவில் முன்பு நின்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. புனிதநீர் பட்டதும் பக்தர்கள், ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, பகுதி செயலாளர் சலீம், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சேகர், என்ஜினீயர் கிருபா, வக்கீல் பிரமுத்து, எஸ்.எஸ்.டி. முருகன், முன்னாள் நகரசபை தலைவர் சி.கே. சுப்பிரமணியன், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், வள்ளி விலாஸ் சீனிவாசன், ஓம் சிவசக்தி டைம்ஸ், மொபைல்ஸ் ரஜினி விக்னேஷ், நியூ அழகப்பா ஜூவல்லரி அழகப்பா ராஜகோபால், வெங்கட்ராமன், அழகப்பா நகை மாளிகை அழகப்பா மணி, கடலூர் மாநகர உறுப்பினர் சரஸ்வதி வேலுசாமி, ஜெய் மஹாவீர் ஜூவல்லரி அசோக்குமார் மற்றும் வண்டிப்பாளையம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண உற்சவம்

மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் அறங்காவலர் குழு தலைவர் ஆர்.பி.நாகராஜன், துணை தலைவர் குப்புராஜ், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பழனி, பருவதராஜகுல சமூகத்தினர், விழாக்குழுவினர், உபயதாரர்கள் செய்திருந்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை மகாதேவ் குருக்கள், பாடலீஸ்வரர் கோவில் குருக்கள் நாகராஜன், ராகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்