< Back
மாநில செய்திகள்
17,740 மாணவிகளுக்கு ரத்த சோகை பரிசோதனை: கரூர் கலெக்டர் தகவல்
கரூர்
மாநில செய்திகள்

17,740 மாணவிகளுக்கு ரத்த சோகை பரிசோதனை: கரூர் கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
11 Jun 2023 12:19 AM IST

உதிரம் உயர்த்துவோம் திட்டம் மூலம் 17,740 மாணவிகளுக்கு ரத்த சோகை பரிசோதனை செய்யப்பட்டது என கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.

கையேடு வெளியீடு

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள வளர் இளம் பெண்களிடையே ரத்த சோகையை கண்டறிந்து குணப்படுத்தும் திட்டம் செயல்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கையேட்டினை கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே முதல்முறையாக கரூர் மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி செல்லும் வளர் இளம் பெண்களிடையே ரத்த சோகை நோயை கண்டறிந்து குணப்படுத்தும் உதிரம் உயர்த்துவோம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

உரிய சிகிச்சை

கரூர் மாவட்டத்தில் 175 பள்ளிகளில் படிக்கும் 17,740 மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர்களின் ஒப்புதலோடு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ரத்த சோகை பரிசோதனைகள் செய்யப்பட்டு முடிவுகள் அறியப்பட்டன.

அதன்படி பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் உலக சுகாதார நிறுவன ஆலோசனைப்படி லேசான மற்றும் மிதமான ரத்த சோகை உள்ளவர்கள் மற்றும் தீவிரமான ரத்த சோகை உள்ளவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டு தீவிர பாதிப்புள்ள 3 சதவீதம் பேருக்கும், லேசான மற்றும் மிதமான பாதிக்கப்பட்ட20.5 சதவீதம் பேருக்கும், லேசாக பாதிக்கப்பட்ட 21 சதவீத பேருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

மாநில முழுவதும் செயல்படுத்த திட்டம்

இத்திட்டம் தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னோடி திட்டம் ஆகும். இத்திட்டம் முதல்-அமைச்சர் பார்வைக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருக்கும் இந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு திட்டத்தை மாநில முழுவதும் செயல்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த சோதனைக்கு பிறகு 520 மாணவிகள் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அதில் 121 மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 9 மாணவிகளுக்கு ரத்த நாளங்கள் வழியாக அயன் செலுத்தப்பட்டு ரத்தம் ஏற்றப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்