< Back
மாநில செய்திகள்
ஆந்திரா இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்- ஓபிஎஸ் அறிக்கை
மாநில செய்திகள்

ஆந்திரா இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்- ஓபிஎஸ் அறிக்கை

தினத்தந்தி
|
27 Sept 2022 3:14 PM IST

ஆந்திரா இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநிலம், குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பேசிய ஆந்திர மாநில முதலமைச்சர், தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லையில், கனகநாச்சியம்மன் கோவில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல், தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க உள்ளதாகவும்; இதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும்; குடிப்பள்ளியில் 0.77 டி.எம்.சி. மற்றும் சாந்திபுரத்தில் 0.33 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பேசி இருக்கிறார்.

இது ஊடகங்களில் செய்தியாக வெளி வந்துள்ளது. பாலாறு, கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் உற்பத்தி ஆகி, செங்கல்பட்டு அருகில் வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தமிழக நதிகளிலேயே பாலாற்றில்தான் நிலத்தடி நீர் அதிகமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது. அது கர்நாடகாவில் சுமார் 93 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திர பகுதியில் 33 கிலோ மீட்டர் தூரமும் பயணித்து தமிழ்நாட்டை வந்தடைகிறது.

தமிழ்நாட்டில் 222 கிலோ மீட்டர் தூரம் பாலாறு பயணிக்கிறது. 222 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் பாலாறு, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு உயிர் நாடியாக பல்வேறு வகைகளில் விளங்குகிறது. விவசாயம், குடிநீர் மற்றும் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வசதி ஆகியவை பாலாற்றின் வழியாகத் தான் அந்தந்த மாவட்ட மக்களுக்கு கிடைக்கிறது. கல்பாக்கம் அணு உலைக்கான நீர் ஆதாரமே பாலாறுதான்.

இது குறித்து நீர்வளத் துறை அமைச்சரால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அது ஒரு பொதுக்கூட்ட செய்தி என்றும், முன்னர் ஒரு முறை கணேசபுரத்தில் அணை கட்டப் போவதாக செய்தி வந்தது என்றும், ஆனால் நேரில் பார்த்தபோது அணை கட்டுவதற்கான அறிகுறி அங்கு இல்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். அதாவது, தற்போதைய செய்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதுபோல் அவரது அறிக்கை அமைந்துள்ளது.

"முன்னர் ஒரு முறை" என்று அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிடுவது 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலம் என்று நினைக்கிறேன். இதை நினைவு வைத்திருக்கும் அமைச்சர், 2001 முதல் 2006 வரையிலான அம்மாவின் ஆட்சிக் காலத்தில் நடந்ததை மறந்து விட்டார் அல்லது தனக்கு வசதியாக மறைத்துவிட்டார்.

அம்மாவின் 2001 முதல் 2006 வரையிலான ஆட்சிக் காலத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப் போவதாக செய்தி வந்ததும் அம்மா, ஆந்திர முதல்-அமைச்சருக்கு 05-01-2006 அன்று ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், 1892-ம் ஆண்டு ஒப்பந்தப்படி கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதியின்றி எந்த ஒரு புதிய அணைக்கட்டோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானங்களையோ கட்டக் கூடாது என வலியுறுத்தியிருந்தார். இருப்பினும், இது குறித்த செய்தி வந்ததும், மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியவர் நீர்வளத் துறை அமைச்சர்.

இது மட்டுமல்ல, 19-01-2006 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய அப்போதைய சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், பாலாறு சகாராவாகக்கூடிய நிலைமை உருவாகிவிடும். அதிகாரிகள் அங்கு அளவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய கொந்தளிப்பு, பதற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் பேசி இருக்கிறார். ஆனால், உண்மை நிலை என்ன என்பதை அமைச்சர் தன்னுடைய அறிக்கையிலே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதை நான் தவறாக கூறவில்லை. அதே சமயத்தில், ஆந்திர மாநில முதல்-அமைச்சர் தமிழ்நாட்டிற்கு எதிராக பேசியிருக்கிறார் என்றால் அதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சிகளின் கடமை. இதன் அடிப்படையிலும், கர்நாடகாவில் அணைகள் கட்டப்பட்டது போன்ற நிலைமை ஏற்படக் கூடாது என்பதன் அடிப்படையிலும் இந்தப் பிரச்சினையை நான் அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

மேலும், இது சாதாரண பத்திரிகைச் செய்தி அல்ல, ஆந்திர முதல்-அமைச்சரின் பேச்சு பத்திரிகையில் செய்தியாக வெளி வந்திருக்கிறது. இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. ஆந்திர மாநில முதல்-அமைச்சருடன் நல்லுறவு வைத்திருக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இது குறித்து அவருடன் பேசி, மேற்படி இரண்டு அறிவிப்புகளையும் ரத்து செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தினை பூர்த்தி செய்யும் வகையில், கனக நாச்சியம்மமன கோவில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிப்பதையும், குடிப்பள்ளி மற்றும் சாந்திபுரத்தில் இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்ட இருப்பதையும் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்