ஆந்திர ரெயில் விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
|மத்திய அரசும், ரெயில்வேயும் ரெயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சென்னை,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா-கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து நின்றது.
அப்போது அதே தடத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு மற்றொரு பயணிகள் ரெயில் சென்றது. அது, நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரெயிலின் பின்புறத்தில் பலமாக மோதியது.
அதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 19 பயணிகள் பலியாகினர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ரெயில் விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, பலியானவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்தார். உடனடியாக மீட்பு, சிகிச்சைப் பணிகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஆந்திர ரெயில் விபத்து சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஜூன் 2023 இல் சோகமான பாலசோர் ரெயில் விபத்து நடந்த சில மாதங்களுக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் ரெயில் மோதிய சம்பவத்தால் ஆழ்ந்த துயரமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்கள் பயணத்திற்காக ரெயில்வேயை நம்பியுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடப்பது கவலையளிக்கிறது. மத்திய அரசும், ரெயில்வேயும் அவசரமாக மறுமதிப்பீடு செய்து, ரெயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி, பயணிகளின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.