திருவள்ளூர்
பள்ளிப்பட்டு அருகே ரூ.167 கோடியில் கொசஸ்தலை ஆற்றில் 2 அணைகள் கட்ட ஆந்திர அரசு தீவிரம்
|பள்ளிப்பட்டு அருகே ரூ.167 கோடியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 அணைகள் கட்ட ஆந்திர அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான நில அளவைக்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கொசஸ்தலை ஆறு
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அம்மபள்ளி என்ற இடத்தில் இருந்து லவா என்கிற ஆறு தொடங்கி பள்ளிப்பட்டுக்கு வருகிறது. அதேபோல் புல்லூர் என்ற இடத்தில் இருந்து குசா என்கிற ஆறு தொடங்கி பள்ளிப்பட்டு நோக்கி வருகிறது. இந்த 2 ஆறுகளும் பள்ளிப்பட்டு- சோளிங்கர் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே ஒன்றாக கலந்து கொசஸ்தலை ஆறாக பாய்கிறது. இந்த ஆற்று நீர் நகரி- திருத்தணி வழியாக பூண்டி ஏரி சென்று அங்கு கலக்கிறது. ஆறு செல்லும் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை இன்றி குடிநீராகவும், விவசாயத்திற்கு பாசன நீராகவும் பயன்பட்டு வருகிறது.
ரூ.167 கோடியில் அணைகள்
இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு கொசஸ்தலை ஆற்றில் இரண்டு இடங்களில் ரூ.167.2 கோடி செலவில் 2 அணைகளை கட்ட சில மாதங்களுக்கு முன்னால் நிதிகளையும் ஒதுக்கியது. பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் கத்திரிப்பள்ளி என்ற கிராமம் அருகே ரூ.92 கோடி செலவில் ஒரு அணையும், மற்றொரு அணை நகரி அருகே மொக்கல கண்டிகை என்ற இடத்தில் ரூ.75.2 கோடி செலவில் கட்ட முடிவு செய்தது. இதில் கத்திரிப்பள்ளி என்ற இடத்தில் கட்டும் அணை நீளம் 3 ஆயிரத்து நூறு மீட்டர், 6.5 மீட்டர் உயரம் இதில் 3 கண்மாய்கள் அமைய உள்ளன. அதேபோல் நகரி அருகே மொக்கல கண்டிகை என்ற இடத்தில் கட்டும் அணை 4,100 மீட்டர் நீளம், 10.8 மீட்டர் உயரம் கொண்டது. இதில் 2 கண்மாய்கள் அமைக்கப்பட உள்ளது.
நிள அளவைக்கு எதிர்ப்பு
தற்போது ஆந்திரா அரசு இந்த இரு அணைகளையும் கட்டும் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக நீர் பாசன துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை, நில அளவை அலுவலர்களும் நேற்று ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் கத்திரிப்பள்ளி என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு நிலங்களை அளக்கும் பணியை தொடங்கினார்கள்.அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தங்கள் பகுதியில் அணை கட்டப்பட்டால் தாசரி நத்தம், பொன்னகல்லு, கத்திரிப்பள்ளி அரிஜன வாடா ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் மட்டுமல்லாது கிராமங்களும் முழுவதும் அழிந்து போகக்கூடிய அபாயம் உள்ளது என தெரிவித்தனர்.
இதனால் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இது குறித்து மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக விவசாயிகளிடம் தெரிவித்து விட்டு சென்றனர்.