விருதுநகர்
ஆண்டாள் கோவில் யானையை பார்வையிட்ட அதிகாரிகள் குழு
|சமூகவலைத்தளத்தில் பரவிய தகவலை ெதாடர்ந்து ஆண்டாள் கோவில் யானையை அதிகாரிகள் குழு பார்வையிட்டது.
கடந்த 14 ஆண்டுக்கு முன்பு அசாமில் இருந்து 5 வயதான பெண் யானை வாங்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஜெயமால்யதா என அழைக்கப்படுகிறது.
இந்த யானை 2 ஆண்டுக்கு முன்பு புத்துணர்வு முகாமில் கலந்து கொண்டபோது, 2 பாகன்கள் யானையை அடித்து துன்புறுத்தியது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பின்பு புதிய பாகன்கள் நியமிக்கப்பட்டு அந்த யானை பராமரிக்கப்படுகிறது.
இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானையை அசாமுக்கு அழைத்து சென்றுவிட்டதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்ட வன உயிரின காப்பாளரும் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனருமான திலீப்குமார், கால்நடை துறை உள்ளிட்ட தமிழக அரசு அதிகாரிகள், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் ஆகியோர்் ஆண்டாள் கோவில் யானையை நேற்று பார்வையிட்டனர். பின்னர் அந்த யானை முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது. அதன் உடல் நலம் குறித்து கால்நடை டாக்டர்கள் மூலம் சோதனை நடத்தி அறிக்கை பெற்றுக்கொண்டனர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "யானை வாங்கும் ேபாது யானை வளர்ப்பதற்கான அனுமதி பெறப்படும். அந்த அனுமதியை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு புதுப்பித்து கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது", என்றார்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், "ஆண்டாள் கோவில் யானை குறித்து தேவையில்லாமல் சிலர் வதந்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். யானை இருப்பதுதான் கோவிலுக்கு அழகு. வதந்தி பரப்புகிறவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.