< Back
மாநில செய்திகள்
பாரிமுனையில் பழமைவாய்ந்த காளிகாம்பாள் கோவில் இந்து சமய அறநிலையத்துறை வசம் வந்தது
சென்னை
மாநில செய்திகள்

பாரிமுனையில் பழமைவாய்ந்த காளிகாம்பாள் கோவில் இந்து சமய அறநிலையத்துறை வசம் வந்தது

தினத்தந்தி
|
4 Oct 2023 10:31 AM IST

பாரிமுனையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தனியார் வசமிருந்த காளிகாம்பாள் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதை கண்டித்து பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் கோவிலுக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.

சென்னை பாரிமுனை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் உள்ள பழமை வாய்ந்த காளிகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகளாக தனியார் வசம் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோவில் நிர்வாக சீரமைப்பு காரணமாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கோவிலுக்கு புதிய தக்காரையும் அறநிலையத்துறை நியமனம் செய்துள்ளது.

அறநிலையத்துறையின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும். தக்கார் நியமனத்திற்கு விளக்கம் கேட்டும் தமிழக பா.ஜ.க.வின் ஆன்மிக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு, பாரத் இந்து முன்னணி அமைப்பினர் திடீரென கோவிலுக்குள் நுழைந்து அறநிலையத்துறைக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, கோவிலை சுற்றி பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரேயா குப்தா மற்றும் துறைமுக போலீஸ் உதவி கமிஷனர் வீரக்குமார் ஆகிய தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்ற போது போலீசாருக்கும், பாரத் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சுமார் 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இது தொடர்பாக பல ஆண்டுகளாக கோவிலை நிர்வகித்து வந்த விஸ்வகர்மா சனாதன தர்ம என்ற தனியார் அறக்கட்டளையினர் கூறுகையில், 3 வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடத்தி கோவிலுக்கு அறக்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில். கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தற்போதையை அறக்காவலர் குழுவின் நியமனக் காலம் முடிவடைந்துள்ளது. தேர்தல் நடத்தி கோவிலுக்கு புதிய அறங்காவலர் குழுவைத் தேர்வு செய்ய ஏப்ரல் மாதம் வரை கால அவகாசம் உள்ளது.

ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கோவிலை கையகப்படுத்தும் முயற்சியில் புதிய தக்காரை நியமித்துள்ளது. இது தொடர்பாக நாங்கள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்கள் கோரிக்கைகளை கருத்தில் எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர் என்று கூறினர்.

மேலும் செய்திகள்