விருதுநகர்
பழமையான வில்வீரன் சிற்பம் கண்டெடுப்பு
|காாியாபட்டி அருகே வில்வீரன் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
காரியாபட்டி,
காாியாபட்டி அருகே வில்வீரன் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
பழமையான சிற்பம்
காரியாபட்டி அருகே மந்திரி ஓடை காட்டுப்பகுதியில் வித்தியாசமான சிலை மண்ணில் புதைந்த நிலையில் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்களான கருப்பசாமி, தர்மராஜா, பாப்பணம் ரஞ்சித்குமார் ஆகியோர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான தாமரைக்கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த சிற்பம் வில்வீரன் என்றும் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பம் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இங்கு காணப்படும் வில்வீரன் சிற்பமானது 5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
தலையை கொய்வதில் வல்லவர்
இதில் வீரன் ஒருவன் இடது கையில் வில்லினை பிடித்த படியும், வலது கையில் அம்பினை பிடித்த படியும், தலையில் மேல் நோக்கிய கொண்டையையும், நீண்ட காதுகளும், கழுத்தில் ஆபரணங்களும், இடையில் இடைக்கச்சையுடன் கம்பீரமான தோற்றத்தில் நின்ற கோலத்தில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பத்தில் வீரனின் காலடியில் 3 நபர்களின் தலைகள் செதுக்கப்பட்டுள்ளது. இதனைவைத்து பார்க்கும்போது இவ்வீரன் அக்காலத்தில் நடந்த பூசலில் எதிரிகளின் தலையை கொய்வதில் வல்லவர் என்பதை விளக்கும் விதமாக இந்த சிற்பத்தில் தலைகள் செதுக்கப்பட்டுள்ளன.
வரலாற்று தடயங்கள்
மேலும் இந்த சிற்பத்தின் அமைப்பை வைத்து பார்க்கும் போது விஜயநகர பேரரசு கால கலைநயத்தில் உருவானதாக கருதலாம். இவ்வூரில் நாயக்கர் கால வில்வீரன் சிற்பமும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட ஒரு பலகை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வீரன் தனது கையில் வில்லினை பிடித்தபடி சிற்பம் நேர்த்தியாக நாயக்கர்களின் கலை பாணியில் வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் காலம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதலாம். மேலும் காரியாபட்டி பகுதிகளில் சமீப காலமாக வரலாற்று தடயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.