அரியலூர்-சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகனுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
|அரியலூர்-சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வருகிற பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகனுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 97 ஏரிகள், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 482 ஏரிகள், ஊரக உள்ளாட்சிகளில் 49 ஏரிகள், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 4 ஏரிகள் என மொத்தம் 632 ஏரிகள் உள்ளன. கொள்ளிடம், மருதையாறு என 2 ஆறுகள் பாய்கின்றன. இவ்வளவு நீர்நிலைகள் இருந்தாலும் அவற்றின் பயன்கள் அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.
திருமானூரை அடுத்த கண்டராதித்தம் கிராமத்தில் ஆயிரத்து 578 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் செம்பியன் மாதேவி ஏரியின் ஆழம் 18 அடி. இதுதான் அரியலூர் மாவட்டத்தின் பெரிய ஏரி. ஆனால், 7 அடி உயரத்திற்கு தூர்மண்டி கிடப்பதால் அதன் கொள்ளளவு பாதியாக குறைந்துவிட்டது. பொன்னேரி எனப்படும் சோழ கங்கம் ஏரி 16 மைல் நீளமும், 3 மைல் அகலமும் கொண்டது. ஆனால், பரப்பளவு இப்போது படிப்படியாக குறைந்து, அதன் ஒட்டுமொத்த சுற்றளவே 5 கி.மீ. என்ற அளவுக்கு குறைந்துவிட்டது.
அரியலூர் மாவட்டத்தின் 2-வது பெரிய ஏரி கரைவெட்டி ஏரி. ஆயிரத்து 100 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து கிடக்கும் இந்த ஏரி, சோழர்கள் காலத்திற்கு பிறகு 1957-ம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் ஒரு முறை தூர்வாரப்பட்டது. இந்த ஏரியின் ஆழம் 35 அடி முதல் 45 அடி வரை ஆகும். ஆனால், இப்போது பல இடங்களில் 15 அடி முதல் 20 அடி வரை தூர்மண்டி கிடக்கிறது.
அரியலூர் மாவட்டத்தில் சுக்கிரன் ஏரி, தூத்தூர் ஏரி, அரசன் ஏரி, ஏலாக்குறிச்சி வண்ணான் ஏரி, வேங்கனூர் ஆண்டியோடை ஏரி, சுள்ளான்குடி ராமுப்பிள்ளை ஏரி, பளிங்கநத்தம் மானோடை ஏரி போன்றவை 100 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் அமைந்துள்ள ஏரிகள்.
அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரிகளை, குறிப்பாக 100 ஏக்கருக்கும் அதிக பரப்பளவு கொண்ட ஏரிகளை தூர்வாருதல், ஆறுகளுக்கும், ஏரிகளுக்கும் இடையிலான நீர்வரத்து கால்வாய்கள், ஏரிகளை இணைக்கும் கால்வாய்கள் ஆகியவற்றை புதுப்பிப்பதன் மூலம் அரியலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோயில் வட்டத்தையும் வளம் கொழிக்கும் பகுதியாக மாற்ற முடியும். அதற்கான திட்டம்தான் அரியலூர்-சோழர் பாசனத்திட்டம் ஆகும்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1922-ம் ஆண்டு வாக்கில் சோழர் கால பாசன கட்டமைப்புகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. நீர் கொண்டு செல்லும் கால்வாய்களின் பாதைகள் அடையாளம் காணப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கால திட்டத்தில் இன்றைய சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து சோழர் கால பாசன கட்டமைப்புகளை மீட்டெடுக்க முடியும். அதை இன்றைய அரசால்தான் செய்ய இயலும்.
எனவே, தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரும் 20-ந் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள 2023-24-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அரியலூர்-சோழர் பாசனத்திட்டத்தை இடம்பெற செய்ய வேண்டும். அத்திட்டத்தை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும், அதன் அடிப்படையில் அரியலூர்-சோழர் பாசனத்திட்டத்தை செயல்படுத்தவும் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.