< Back
மாநில செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு அன்புமணி ராமதாஸ் நேரில் ஆறுதல்
மாநில செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு அன்புமணி ராமதாஸ் நேரில் ஆறுதல்

தினத்தந்தி
|
9 July 2024 5:26 PM IST

ஆம்ஸ்ட்ராங் மறைவு சமூகநீதிக்கு பின்னடைவு என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5ம் தேதி இரவு பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்து வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. கொலையாளிகள் தப்பிச்செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு நேரில் சென்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

நண்பர் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு செய்தி கேட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. தமிழ்நாட்டின் சமூக நீதிக்கு மிகப்பெரிய பின்னடைவு. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும், ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக சொல்லி வந்தவர் ஆம்ஸ்ட்ராங்.

ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கூலிப்படை கலாச்சாரத்தை வேரோடு அறுக்க வேண்டும். சேலத்தில் அதிமுக நிர்வாகி, கடலூரில் பாமக நிர்வாகி, எனத் தொடர்ந்து பல பேர் படுகொலை செய்யப்பட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் பெரிய தலைவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர், அதனை போக்க கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்