தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி பா.ம.க தான் - அன்புமணி ராமதாஸ் பேட்டி
|தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி பாமக தான் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் பா.ம.க. கொடியேற்று விழா நடைபெற்றது. இவ்விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
2026 பா.ம.க. ஆட்சி என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம். மக்கள் சார்ந்த பிரச்சனைகளை முன் வைப்பதில் பா.ம.க. தான் இன்று தமிழக மக்களுக்கு துணையாக உள்ளது. உண்மையான எதிர்க்கட்சியாக, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள், மக்கள் சார்ந்த பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு காரணமாக திகழ்கிறது.
அது அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி. திருப்பூர், கோவை, ஈரோடு, உள்ளடங்கிய 3 மாவட்டங்களில் ஜவுளி தொழில் முக்கியமானது.
தற்போது கடும் நூல் விலை உயர்வால் ஜவுளி தொழில் பாதிப்பு ஏற்பட்டு 3 மாவட்டத்தில் உள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி ஏழு ஆண்டுகளாக போராடி வருகிறோம். முந்தைய அ.தி.மு.க. அரசு அவசர தடைச்சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்த பிறகு இதுவரை 23 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
இது குறித்த விளக்கத்தை, தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து. தடை ஆணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேகதாது அணை கட்டுவது குறித்த காவிரி மேலாண்மை ஆணையம் வரும் 17-ம் தேதி டெல்லியில் கூட்டம் நடத்துகிறது.
உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தமிழக அரசு அனுமதி இல்லாமல் கர்நாடகா எந்த அணையையும் காவிரியின் குறுக்கே கட்டக்கூடாது என அறிவித்துள்ளது. மேகதாது அணை கட்டுவது இத்தீர்ப்புக்கு எதிரானது. பல்லடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது எனவே மேம்பாலம் அமைக்க வேண்டும். பஸ் நிலையம் எதிரே மதுபான கடைகள் உள்ளன அவற்றை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.