ராணிப்பேட்டை
ரூ.2¼ லட்சத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்
|சோமசமுந்தரம் கிராமத்தில் ரூ.2¼ லட்சத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம் பழுதடைந்து விட்டது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் தெருவில் கடந்த 2002-2003-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிலிருந்து ரூ.2¼ லட்சம் மதிப்பில் ஊரக மகளிர் மட்டும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட கழிவறைகள், குளியல் அறைகள், துணி துவைப்பத்தற்க்கான வசதிகளுடன் கட்டப்பட்டது. இது 26.11.2003 அன்று திறக்கப்பட்டது. இந்த சுகாதார வளாகம் இதுவரை பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. தற்போது இந்த கட்டிடம் முழுவதும் பழுதடைந்து உள்ளது. கதவுகள் உடைந்த நிலையில் உள்ளது.
கட்டிடத்தின் முன்பக்கம் மற்றும் உள்பக்கம் செடிகள் முளைத்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பல முறை ஊராட்சி நிர்வாகத்திற்கும், ஒன்றிய நிர்வாகிகத்திற்கும் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சுகாதார வளாகத்தை புதுபித்து தர வேண்டும் என கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.