< Back
மாநில செய்திகள்
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக்கொலை
மாநில செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக்கொலை

தினத்தந்தி
|
4 Oct 2022 3:41 AM IST

ஆவடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி, பொதிகை நகரைச் சேர்ந்தவர் சாவித்திரி (வயது 71). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

சாவித்திரி, இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு சொந்தமான 3 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து அவர் பிழைத்து வந்தார்.

அடித்துக்கொலை

நேற்று முன்தினம் இரவு சாவித்திரியை பார்க்க அவரது பேரன் ஜெகன் வீட்டுக்கு வந்தார். அப்போது தனது பாட்டி சாவித்திரி, தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் சாவித்திரியை அடித்துக்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி போலீசார், கொலையான சாவித்திரி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நகை, பணத்துக்காக கொலை நடந்ததா? என அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். ஆனால் வீட்டில் இருந்த நகை, பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. அவர் அணிந்திருந்த நகைகளும் அப்படியே இருந்தது.

காரணம் என்ன?

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சாவித்திரி எதற்காக கொலை செய்யப்பட்டார்?. கொலையாளிகள் யார்? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் கடைசியாக அவரது வீட்டுக்கு யாரெல்லாம் வந்து சென்றார்கள்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் அவரது உறவினர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்