< Back
மாநில செய்திகள்
தங்க கம்மலுக்காக அம்மிக்கல்லை போட்டு மூதாட்டி கொலை; பக்கத்து வீட்டுக்காரர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

தங்க கம்மலுக்காக அம்மிக்கல்லை போட்டு மூதாட்டி கொலை; பக்கத்து வீட்டுக்காரர் கைது

தினத்தந்தி
|
19 Feb 2023 6:25 PM IST

வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்று ½ பவுன் தங்க கம்மலை கொள்ளையடித்து சென்ற பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டி பிணமாக கிடந்தார்

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் மூவேந்தர் தெருவில் வசித்து வந்தவர் காணிக்கை மேரி (வயது 81). இவருடைய கணவர் இறந்து விட்டார். இதனால் காணிக்கை மேரி இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவர் முதியோர் உதவி தொகையை வைத்து பிழைத்து வந்தார்.

நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் மூதாட்டி காணிக்கை மேரி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு பெண் முத்துலட்சுமி என்பவர் மூதாட்டியின் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

அங்கு மூதாட்டி காணிக்கை மேரி தலையில் பலத்த ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகைக்காக கொலை

இது குறித்து தகவல் அறிந்துவந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்த மூதாட்டியின் காதில் அணிந்து இருந்த ½ பவுன் தங்க கம்மல் மாயமாகி இருந்தது. எனவே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் உறுதி செய்தனர்.

கொலையான மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

பக்கத்து வீட்டுக்காரர் கைது

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக மூதாட்டி காணிக்கை மேரி வீட்டின் பக்கத்து வீட்டுக்காரரான வெங்கடேஷ்(39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் பக்கத்து வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டி காணிக்கை மேரி கழுத்தில் ½ பவுன் தங்க கம்மல் அணிந்து இருப்பது வெங்கடேஷ் கண்ணில் பட்டது. அந்த கம்மலை அபகரிக்க பல நாட்களாக அவர் திட்டமிட்டு வந்தார்.

அம்மிக்கல்லை போட்டு...

அதன்படி நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ் குடிபோதையில் மூதாட்டியின் வீட்டுக்குள் சென்றார். பின்னர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி காணிக்கை மேரி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த ½ பவுன் தங்க கம்மலை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கைதான வெங்கடேசை மாதவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்