திருவண்ணாமலை
அரசு பஸ் மோதியதில் மின்கம்பம் சரிந்து விழுந்து மூதாட்டி பலி
|திருவண்ணாமலையில் அரசு பஸ் மோதியதில் மின்கம்பம் சரிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
மின்கம்பத்தில் பஸ் மோதியது
திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் பஸ்சை இன்று அதிகாலை சுமார் 3.45 மணியளவில் அதன் டிரைவர் திருவண்ணாமலை அரசு போக்குவரத்து பணியில் இருந்து எடுத்து கொண்டு திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர வீதி கற்பக விநாயகர் கோவில் அருகில் வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக பஸ் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.
மூதாட்டி சாவு
இதனால் மின்கம்பம் சரிந்து அதன் அருகில் நின்று கொண்டிருந்த பூ வியாபாரம் செய்யும் திருவண்ணாமலை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த அன்னபூரணி (வயது 80) என்பவர் மீது விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.