கரூர்
ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
|ஓடும் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ரெயில் பயணம்
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் கடந்த 3.2.2023-ந்தேதி இரவு தங்களது பெண் குழந்தைகளுடன் எர்ணாகுளம்- காரைக்கால் வரை செல்லும் ரெயிலில் கரூருக்கு முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்தனர்.
இவர்கள் பயணம் செய்த அதே பெட்டியில் கேரளா மாநிலம், பத்தினம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த கணேஷ்குமார் (வயது 62) என்பவரும் பயணம் செய்தார்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
இந்நிலையில் 4.2.2023-ந் தேதி (அடுத்தநாள்) ரெயில் காலை 5.45 மணியளவில் புகழூர்-கரூர் இடையே வந்தபோது இருக்கையில் படுத்து தூங்கி கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு, கணேஷ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை ரெயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் பார்த்து சிறுமியின் தாயாரிடம் கூறி சத்தமிட்டார். பின்னர் ரெயில் கரூர் ரெயில் நிலையம் வந்தவுடன், கணேஷ்குமாரை பிடித்து கரூர் ரெயில் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். கரூர் ரெயில் நிலைய போலீசார் கணேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
5 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று மகளிர் விரைவு நீதிபதி நசீமா பானு தீர்ப்பளித்தார்.
அந்த தீர்ப்பில் கணேஷ்குமாருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் ரூ.1000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.