2 ரூபாய் பங்கு பிரிப்பதில் தகராறு: பிச்சைக்காரரை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை..!
|நாகர்கோவிலில் பிச்சைக்காரரை அடித்து கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் சிலர் பிச்சை எடுப்பதோடு அங்கே தங்கியும் இருக்கிறார்கள். அவர்களுடன் குமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 55 வயதுடைய முதியவரும் பிச்சை எடுத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டோராடுன் கந்காரை சேர்ந்த பிரகாஷ் (வயது 70) என்பவரும் அவர்களுடன் சோ்ந்து பிச்சை எடுத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 1-12-2020 அன்று பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் குமரி மாவட்ட பிச்சைக்காரரும், பிரகாசும் சேர்ந்து பிச்சை எடுக்க சென்றனர். அப்போது ஒரு கடைக்காரர் 2 ரூபாய் கொடுத்து ஆளுக்கு ஒரு ரூபாய் வைத்துக் கொள்ளும்படி கூறினார். இதை பங்கு வைப்பது தொடர்பாக 2 பிச்சைக்காரர்களுக்கும் இடையே நடுரோட்டில் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் தான் வைத்திருந்த உருட்டு கட்டையால் குமரி மாவட்ட பிச்சைக்காரரை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பிச்சைக்காரரை வடசேரி போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து பிரகாஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி ஜோசப் ஜாய் விசாரணை நடத்தினார். அரசு தரப்பில் அரசு வக்கீல் மதியழகன் ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட பிரகாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார். அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கில் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கொலையான பிச்சைக்காரர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தற்போது வரை தெரியவில்லை. கொலையான நபர் யார் என்று தெரியாத நிலையில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.