< Back
மாநில செய்திகள்
காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்

தினத்தந்தி
|
25 Aug 2022 9:08 PM IST

கொடைக்கானல் அருகே, காட்டெருமை தாக்கியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து நகர் பகுதிக்குள் காட்டெருமைகள் புகுந்து சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்துவது வாடிக்கையாகி விட்டது. அதன்படி கொடைக்கானலை அடுத்த வட்டக்கானல் பகுதியில் நேற்று காலை காட்டெருமைகள் முகாமிட்டிருந்தன. அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த முருகையா (வயது 72) என்பவர், வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது புதருக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று திடீரென அவரை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் ேமல்சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களாக, காட்டெருமை ெபாதுமக்களை தாக்குவது வாடிக்கையாகி விட்டது. எனவே குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே வட்டக்கானல் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் காட்டெருமை நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வனத்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பல்வேறு குழுக்களாக பிரிந்து, வனத்துறையினர் காட்டெருமைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்