ராமநாதபுரம்
முதியவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
|கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிவடையும் தருவாயில் கலெக்டர் அலுவலக வளாக பகுதிக்கு வந்த முதியவர் ஒருவர் திடீரென்று தான் கொண்டு வந்த டீசலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கத்தி கூச்சலிட்டனர். உடனடியாக போலீசார் அங்கு சென்று அவரை பாதுகாப்பாக மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட முதியவர் ராமநாதபுரம் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ராமகிருஷ்ணன் (வயது 67) என்பது தெரிந்தது.
முன்னாள் ஊர்க்காவல் படை வீரரான இவர் மண்டபம் பகுதியில் பள்ளி ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருவதாகவும் சில மாதங்களாக இவருக்கு சம்பளம் வழங்கவில்லை என்பதால் குடும்பம் நடத்த முடியாமல் அவதிப்படுவதாகவும் இதனால் மனம் உடைந்து சம்பளம் வழங்க கோரி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.