சேலம்
சாலையில் தேங்கிய மழைநீரில் தவறி விழுந்து முதியவர் சாவு
|சேலம் நெத்திமேடு பகுதியில் சாலையில் தேங்கிய மழைநீரில் தவறி விழுந்து முதியவர் பலியானார்..
சேலம் நெத்திமேடு பகுதியில் சாலையில் தேங்கிய மழைநீரில் தவறி விழுந்து முதியவர் பலியானார்..
சேலத்தில் மழை
சேலத்தில் நேற்று முன்தினம் மாலை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. சேலம்- சங்ககிரி மெயின்ரோடு நெத்திமேடு காளியம்மன் கோவில் அருகே உள்ள சாலையில் சுமார் 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியது.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு நடந்து செல்ல முடியாமல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அவதிப்பட்டனர்.
முதியவர் பலி
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 8 பேர் அடுத்தடுத்து தண்ணீரில் தவறி விழுந்தனர். அவர்களில் நெத்திமேடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 70) என்பவர் மோட்டார் சைக்கிளுடன் தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்துவிட்டார். இதை பார்த்தவுடன் அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்துபோன முதியவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், ராஜேந்திரன், பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகர் என்பவரின் தந்தை என்பதும், அவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது சாலையில் ஓடிய தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்தது.