திருவண்ணாமலை
ரூ.5¼ லட்சத்தை கையாடல் செய்த தனியார் நிதி நிறுவன அதிகாரி
|கிராமப்புற பெண்களை குழுவாக சேர்த்து கடன் வழங்கி தவணை தொகையை திரும்பி செலுத்தாமல் ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்தை கையாடல் செய்த தனியார் நிறுவன அதிகாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை
கிராமப்புற பெண்களை குழுவாக சேர்த்து கடன் வழங்கி தவணை தொகையை திரும்பி செலுத்தாமல் ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்தை கையாடல் செய்த தனியார் நிறுவன அதிகாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிறுவனம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா செய்யாற்று வென்றான் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 31). இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கிராமப்புற பெண்களை குழுவாக சேர்த்து அவர்களின் ஆவணங்களை சரிபார்த்து குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு கடன் வழங்கி பின்னர் கடன் தொகையை தவணை முறையில் வசூல் செய்து நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருவது வழக்கம்.
கடந்த 2020-ம் ஆண்டு மற்றும் 2021-ம் ஆண்டுகளில் உறுப்பினர்களிடமிருந்து தவணைத் தொகை வசூல் செய்த பணத்தை நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தாமல் இருந்து வந்ததாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு புகார்கள் சென்றுள்ளன.
ஆய்வு
இதையடுத்து செய்யாறு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் மேலாளர்கள் மணிகண்டன், பிரபு மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி மதியழகன் ஆகியோர் கிளையின் கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது ஸ்ரீதரன் ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 984-ஐ செலுத்தாமல் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.