நாகப்பட்டினம்
பறவைகளை ரசிக்க ரூ.5 லட்சத்தில் பார்வையாளர் கோபுரம்
|கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை ரசிக்க ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் கோபுரம் விரைவில் பயன்பாட்டுக்கு விடப்படும் என வனச்சரகர் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம்:
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை ரசிக்க ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் கோபுரம் விரைவில் பயன்பாட்டுக்கு விடப்படும் என வனச்சரகர் தெரிவித்துள்ளார்.
பறவைகள் சரணாலயம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பசுமை மாறா காட்டில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது இந்த சரணாலயத்தில் 2000-க்கும் மேற்பட்ட புள்ளிமான், வெளிமான், குரங்கு, குதிரை, நரி, காட்டுப்பன்றி உள்ளன.
இதன் எதிரே சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் ரஷ்யா, ஈரான், ஈராக், பாகிஸ்தான், இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 290 வகையான பறவைகள் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வந்து தங்கி செல்கின்றன.
கஜா புயலில் சேதம்
பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் இந்த சரணாலயத்திற்கு 6 மாத சீசன் காலத்தில் இங்கு வந்து தங்கி செல்லும் பறவைகளை காண வெளிமாநிலம், வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பறவைகளின் அழகைக் காண கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முனியப்பன் ஏரி முன்பு பார்வையாளர்கள் கோபுரம் கட்டப்பட்டது. கஜா புயலின் போது அந்த பார்வையார்களின் கோபுரம் இடிந்து விழுந்து விட்டது. இதனால் பறவையின் அழகை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ரூ.5 லட்சத்தில் பார்வையாளர் கோபுரம்
இந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் நலன்கருதி திருச்சி தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகை வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா ஆகியோரின் உத்தரவின் பேரில் வனத்துறையின் சார்பில் ரூ.5 லட்சம் செலவில் கஜா புயலில் இடிந்து விழுந்த பார்வையாளர் கோபுரத்தை இடித்து அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த பார்வையாளர்களின் கோபுரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட விரைவில் திறக்கப்படும். இதே போல் வனவிலங்குகளை ரசிப்பதற்கு முன்னாங்காடு பகுதி, ராமர் பாதம் பழைய சோழர்கால கலங்கரை விளக்கம் அருகிலும் பார்வையாளர்கள் கோபுரம் உள்ளது.
வேட்டை தடுப்பு பணி
இந்த பார்வையாளர் கோபுரம் சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கும், வேட்டை தடுப்புக்கு காவலர்கள் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட பயன்படுத்தப்பட்டு வருகிறது என கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்.