அண்ணா சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் - மேயர் பிரியா
|அண்ணா சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆனந்த் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே மிகவும் பழமையான கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலையும் வழக்கம்போல் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கட்டிடம் இடிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, ஜே.சி.பி. எந்திரம் கட்டிடத்தின் உள்பக்கம் இருந்து இடிக்கும் பணியை மேற்கொண்ட போது, கட்டிடத்தின் சுற்றுச்சுவர் சாலையோர நடைபாதையில் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அந்த பக்கமாக நடந்து சென்ற ஒரு இளம்பெண் உள்பட 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். ஒருவர் எவ்வித காயமும் இன்றி தப்பிச்சென்றுவிட்டார்.
அதே நேரத்தில், கட்டிட இடிபாடுகளுக்குள் இளம்பெண் உள்பட 2 பேர் சிக்கிக்கொண்டதை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். இதுபற்றி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆயிரம் விளக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கி இருந்த இளம்பெண் மற்றும் வாலிபரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இளம்பெண் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். வாலிபர் காலில் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னை மேயர் பிரியா இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
விபத்து ஏற்பட்ட கட்டடத்தை இடிக்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் உள்ள கட்டிடத்தை இடிக்கும் பணி அனுமதி பெற்று தான் நடந்துள்ளது. ஆனால், முறையான பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தாமல் இருந்துள்ளனர். சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
மேலும் இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் நிகழாத வண்ணம் கட்டிடங்கள் இடிக்கப்படும் போது அதிகாரிகளை நேரில் சென்று ஆய்வ்ய் செய்ய உத்தரவிடுவோம் என கூறினார்.
இந்த பேட்டியின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உடன் இருந்தார்.