நீலகிரி
பண பலன்கள் வழங்காதது குறித்து விசாரணை நடத்த வேண்டும்
|கூடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பண பலன்கள் வழங்காதது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
கூடலூர்
கூடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பண பலன்கள் வழங்காதது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
நகராட்சி கூட்டம்
கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், துணைத் தலைவர் சிவராஜ், பொறியாளர் சாந்தி, மேலாளர் நஞ்சுண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் ஒப்புதல் பெறுவதற்காக தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
கவுன்சிலர் கவுசல்யா:- வார்டுகளில் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும்.
கவுன்சிலர் தனலட்சுமி:- எனது வார்டில் எந்த பணிகளும் நடைபெறுவதில்லை. இதை கண்டித்து பொதுமக்களை அழைத்து வந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்.
ஆணையாளர்:- ஆய்வு நடத்தி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
விசாரணை நடத்த வேண்டும்
கவுன்சிலர் சையத் அனூப்கான்:- கூடலூர் நகருக்குள் காலை 8 மணி முதல் 9.30 வரை லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, போலீசார் மூலம் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். சட்டப்பிரிவு-17 நிலத்தில் வசிக்கும் மக்களின் சொத்துகளுக்கு பெயர் மாற்றம் செய்யும் பணி நகராட்சியில் மிக தாமதமாக நடைபெறுகிறது.
ஆணையாளர்:- கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்தி உடனடியாக பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் சையத் அனூப்கான் உள்பட பெரும்பாலான கவுன்சிலர்கள், கொரோனா காலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு, அவர்களது கணக்கில் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பண பலன்கள் செலுத்தவில்லை. இதில் ரூ.40 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.
ஆணையாளர்:- 15 நாட்கள் கால அவகாசம் வழங்கினால் உரிய விசாரணை நடத்தி எவ்வளவு பணம் செலுத்தவில்லை என மன்றத்தில் தெரிவிக்கப்படும்.
கவுன்சிலர் ராஜேந்திரன்:- புதிய பஸ் நிலைய விரிவாக்க பணி எப்போது முடிவடையும்?.
ஆணையாளர்:- இன்னும் ஒரு வாரத்தில் புதிய பஸ் நிலையத்தில் இறுதி கட்ட பணி தொடங்கப்படும்.
ரோப் கார்
கவுன்சிலர் வெண்ணிலா:- கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஸ்டேடியம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாக்கமூலாவில் பூங்கா அமைக்க வேண்டும். ஊசிமலையில் இருந்து மாக்கமூலா வரை ரோப் கார் அமைக்க வேண்டும். ஆத்தூரில் இருந்து கூடலூர் நகருக்கு புதிய குடிநீர் திட்டம் தொடங்க வேண்டும். இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற மாவட்டத்திட்ட குழு கமிட்டி கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.