சேலம்
சேலத்திற்கு 11-ந் தேதி வருகை தரும்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு
|சேலத்திற்கு 11-ந் தேதி வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் கூட்டம்
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. (மத்தியம்), டி.எம்.செல்வகணபதி (மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு) மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சேலத்திற்கு வருகிற 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். அவர் சேலம் அண்ணா பூங்கா முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து ஈரடுக்கு பழைய பஸ்நிலையம் திறப்பு, இளம்பிள்ளையில் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடக்கும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு சுமார் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மேட்டூர் அணை திறப்பு
இதனை தொடர்ந்து 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு, முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
இந்த ஆட்சியில் நிறைய தவறுகள் நடக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் கடந்த ஆட்சியில் அவர்கள் செய்த தவறுகளால் தான் தி.மு.க. ஜெயித்திருக்கிறது. கடந்த ஆட்சியில் செய்த தவறுகளை திரும்பி பார்க்க வேண்டும். அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் ஜெயித்துவிடலாம் என்று அ.தி.மு.க.வினர் நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகள், திருச்சியில் 9 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளிலும் நாம் முழுமையாக வெற்றி பெற வேண்டும். அதற்கான யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவோம்.
அனைத்து சமுதாய மக்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைவராக இருக்கிறார். இதனால் அவருக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
முதல்-அமைச்சருக்கு வரவேற்பு
கூட்டத்தில், சேலம் மாவட்டத்திற்கு வருகிற 11, 12-ந் தேதி வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடி, ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக சேலத்திற்கு வரும் முதல்-அமைச்சருக்கு எவ்வாறு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பேசினர். இந்த கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மலர்விழி ராஜா, எஸ்.ஆர்.அண்ணாமலை, மாநகர செயலாளர் ரகுபதி, முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி, சேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.