நாகப்பட்டினம்
வேளாங்கண்ணியில் பொழுதுபோக்கு கண்காட்சி அமைக்க வேண்டும்
|வேளாங்கண்ணியில் பொழுதுபோக்கு கண்காட்சி அமைக்க வேண்டும்
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வேளாங்கண்ணியில் பொழுதுபோக்கு கண்காட்சி அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளிக்கப்பட்டது.
கோரிக்கை மனு
நாகை மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்ட விரிவாக்கம் திட்டத்தை திருக்குவளையில் தொடங்கி வைக்க வந்தார். அப்போது அவர் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த போது, தி.மு.க கீழையூர் ஒன்றிய செயலாளரும், வேளாங்கண்ணி பேரூராட்சியின் துணைத்தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொழுது போக்கு கண்காட்சி
வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு நடக்கும் திருவிழா நாட்களில் சுமார் 15 லட்சம் பேர் கலந்துகொள்கின்றனர். மாதாவை தரிசிக்க வரும் பயணிகள் இங்கு எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத நிலையில் ஓரிரு நாட்களிலேயே சொந்த ஊர்களுக்கு திரும்பி விடுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளை நம்பியே வாழ்ந்து வரும் இந்த பேரூராட்சி பகுதி பொது மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகிறது.
எனவே வேளாங்கண்ணி பேரூராட்சியில் சுற்றுலா வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாக ஆலயத்தின் தென்பகுதியில் உள்ள
வெள்ளையாற்றின் கரையில் படகுத்துறை ஒன்றை உருவாக்கியும், ஆற்றின் மேற்கு பகுதியில் அலையாத்தி காடுகளை உருவாக்கி சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறை மூலம் (தீம் பார்க்) பொழுதுபோக்கு கண்காட்சிகள்
அமைக்க வேண்டும்.
புதைவட மின் பாதை
வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் கடந்த ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் புதைவட மின்பாதை அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள தெருவிளக்கு மட்டும் மேல்நிலை மின்கம்பங்கள் மூலம் மின்கம்பிகள் வழியாக மின்வனியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே
மேல்நிலை மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதைவட மின் பாதை வழியாக தெருவிளக்குகளுக்கு அலங்கார மின்கம்பங்கள் அமைத்து மின் வினியோகம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.