செங்கல்பட்டு
கிழக்கு கடற்கரை சாலையில் மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் சாவு
|மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட என்ஜினீயரிங் மாணவர் கார் சக்கரத்தில் சிக்கிய விபத்தில் பலியானார்.
என்ஜினீயரிங் மாணவர்கள்
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுவரதன் ரெட்டி (வயது 21). இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் சகமாணவரான சவுத்ரி (22) என்பருடன் மாமல்லபுரம் நகரை சுற்றி பார்க்க மோட்டார் சைக்கிளில் நேற்று சென்றுள்ளார். பின்னர் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்தனர். இதையடுத்து மீண்டும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவர்கள் சென்னை திரும்பி கொண்டிருந்த போது வடநெம்மேலி என்ற இடத்தில் வந்தபோது, சாலையின் குறுக்கே வந்த பசுமாடு ஒன்று அதிவேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
உடல் நசுங்கி பலி
இந்த விபத்தில் காயமடைந்த விஷ்ணுவரதன் ரெட்டி ரத்தவெள்ளத்தில் சாலையில் விழுந்த நிலையில், பின்னால் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று அவர் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் பின் சீட்டில் அமர்ந்து வந்த மாணவர் சவுத்ரி சர்வீஸ் சாலையில் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஆம்புலன்சு மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் எச்சரிக்கை
இதைத்தொடர்ந்து பலியான விஷ்ணுவரதன் ரெட்டி உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் கிழக்கு கடற்கரை சாலையில் பசுக்களால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதால், பொறுப்பில்லாமல் மாடுகளை சாலைகளில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.