திருவள்ளூர்
கனகம்மாசத்திரம் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு
|கனகம்மாசத்திரம் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சிசிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த வி.ஜி.கே.புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருக்கு மங்கா என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும், வல்லரசு (வயது 18) என்ற மகனும் இருந்தனர். வல்லரசு நர்சிங் படிப்பை முடித்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த சக நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள பனை மர தோப்பில் பனங்காய் வெட்டுவதற்காக சென்றார்.
பின்னர் பனை மரத்தில் ஏறி பனங்காய் வெட்டிக் கொண்டிருந்த வல்லரசு திடீரென கைத்தவறி பனை மரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த வல்லரசுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வல்லரசு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி வல்லரசு பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனை மரத்தில் ஏறி வாலிபர் தவறி கீழே விழுந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.