பன்றி வேட்டைக்கு வைத்த நாட்டுவெடி வெடித்து யானை பலி
|பன்றி வேட்டைக்கு வைத்ததை பழம் என்று தின்றபோது நாட்டு வெடி வெடித்து யானை பலியானது.
கோவை,
கோவை வனக்கோட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகங்களில் மலையோர கிராமங்களில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இதனை இறைச்சிக்காக கொல்லும் கும்பல்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இவர்கள் காட்டுப்பன்றிகளை நூதன முறையில் பிடிக்க அவுட்டுக்காய் என்கிற நாட்டு வெடியை பயன்படுத்துகின்றனர்.
இரவு நேரங்களில் அப்பகுதிகளில் நடமாடும் காட்டு பன்றிகள், நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைத்துள்ள உணவு பொருட்களின் வாசத்தை அறிந்து, அருகில் சென்று அதை கடிக்கும் போது, தாடை, முகம் ஆகியவை சிதறி, கோரமாக இறந்து விடுகின்றன. உடனே அந்த கும்பல், காட்டு பன்றியின் உடலை எடுத்து, கூறு போட்டு விற்பனை செய்து விடுகின்றனர்.
காட்டு யானை பலி
இந்த நிலையில் வனத்துறையின் களப்பணியாளர்கள் நேற்று காலை கோவை தடாகம் பகுதியில் வீரபாண்டி தனியாருக்கு சொந்தமான சேம்பர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு காட்டு யானை ஒன்று எழுந்து நடக்க முடியாமல் படுத்தவாறு கிடந்தது. இதுபற்றி உடனே களப்பணியாளர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறை டாக்டர் அங்கு வந்து யானையை சோதனை செய்தபோது காட்டுப்பன்றிக்கு வைத்த நாட்டு வெடியை பழம் என்று நினைத்து தின்றபோது, வெடித்து வாய் கிழிந்து காயம் ஏற்பட்டது தெரியவந்தது. அந்த காயத்துக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருந்தபோதிலும் மதியம் 2.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து அந்த யானையின் உடல் மீட்கப்பட்டு மாங்கரை வன ஓய்வு விடுதி வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு வனக்கால்நடை டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர் வனக்குற்ற வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.