ஈரோடு
அம்மாபேட்டை அருகே சேற்றில் வழுக்கி விழுந்த யானை சாவு
|அம்மாபேட்டை அருகே சேற்றில் வழுக்கி விழுந்த யானை இறந்தது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகம் குருவரெட்டியூர் பிரிவு எண்ணமங்கலம் காப்புக்காடு முரளி மேற்கு பீட், குரும்பனூர்காடு சரக பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். உடனே அவர்கள் இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும், மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி வன பாதுகாவலர் மதிவாணன், வனச்சரகர்கள் செங்கோட்டையன், பழனிசாமி, எண்ணமங்கலம் உதவி கால்நடை டாக்டர் அருள்முருகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். பின்னர் டாக்டர் அருள்முருகன், யானைக்கு உடற்கூறு பரிசோதனை செய்தார்.
இதுகுறித்து டாக்டர் அருள்முருகன் கூறுகையில், 'இறந்த யானை பெண் யானை ஆகும். இந்த யானைக்கு 20 முதல் 30 வயது வரை இருக்கும். சேற்றில் வழுக்கி விழுந்ததில் யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு எழுந்திருக்க முடியாமல் யானை இறந்து இருக்கலாம்,' என்றார். இதையடுத்து இறந்த யானையின் கோரைப்பற்கள் அகற்றப்பட்டு சென்னம்பட்டி வனச்சரக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உடற்கூறு செய்யப்பட்ட யானையின் மற்ற பாகங்கள், குழிதோண்டி அங்கேயே புதைக்கப்பட்டது.