சென்னை
மின்இணைப்பு ஏற்படுத்தும் 'பேன்டோகிராப்' உடைந்துபோனதால் தாம்பரம்-சானடோரியம் இடையே நடுவழியில் நின்ற மின்சார ரெயில்
|மின்சார ரெயிலுக்கு மின்இணைப்பு ஏற்படுத்தும் ‘பேன்டோகிராப்’ உடைந்துபோனதால் தாம்பரம்-சானடோரியம் இடையே நடுவழியில் மின்சார ரெயில் நின்றதால் ஒரு மணிநேரம் பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் ெரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை நோக்கி நேற்று மதியம் மின்சார ெரயில் சென்று கொண்டிருந்தது. தாம்பரம்-சானடோரியம் ெரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும்போது, திடீரென ரெயிலுக்கு மின் இணைப்பு ஏற்படுத்தும் கம்பியான 'பேன்டோகிராப்' உடைந்து போனது. இதனால் பலத்த சத்தம் கேட்டதால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் காரணமாக நடுவழியில் மின்சார ெரயில் நின்றது. இதையடுத்து தாம்பரம் ெரயில் நிலைய என்ஜினீயர் பிரிவு ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மின்சாரத்தை நிறுத்தி உடைந்து போன 'பேன்டோகிராப்' கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் தாம்பரம்-கடற்கரை இடையே மின்சார ெரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த பல மின்சார ெரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு உடைந்துபோன 'பேன்டோகிராப்' கம்பி சீரமைக்கப்பட்டது. ஆனாலும் அந்த மின்சார ரெயில் மீண்டும் தாம்பரம் ெரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடுவழியில் நின்றதால் அவதி அடைந்த பெண்கள் உள்பட பயணிகள் ரெயிலி்ல் இருந்து இறங்கி சானடோரியம் ரெயில் நிலையத்துக்கு தண்டவாளத்தில் நடந்தே சென்றனர். சுமார் 1½ மணிநேரத்துக்கு பிறகு தாம்பரம்-கடற்கரை இடையே மீண்டும் மின்சார ரெயில் போக்கு வரத்து சீரானது.