திண்டுக்கல்
தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
|வேடசந்தூர் அருகே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வெரியம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 50). மில் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். அவரது மனைவி சரசு (45) வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்த பேட்டரி திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அத்துடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சரசு, தனது கணவர் மற்றும் உறவினர்களை வரவழைத்தார். அவர்கள் ஸ்கூட்டரில் பற்றி எரிந்த தீயை, தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இருப்பினும் ஸ்கூட்டரின் பின்பக்க பகுதி எரிந்து நாசமானது. இதேபோல் பேட்டரி வெடித்தபோது, வீட்டின் முன்பு இருந்த மின்விசிறி, ஜன்னல் உள்ளிட்டவை சேதமடைந்தன. மேலும் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்தபோது, சரசு சற்று தூரத்தில் அமர்ந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.